அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பொன்மலை ரயில்வே பணிமனையில் பாத்வே உடைந்து 3 பேர் காயம், 2 பேருக்கு எலும்பு முறிவு
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மே 21-ம் தேதி ரயில் என்ஜினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 டெக்னீஷியன்கள் பாத்வே உடைந்து விழுந்ததில் காயமடைந்தனர். ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர்களில், இருவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத பொன்மலை ரயில்வே பணிமனை தொழிற்சங்க நிர்வாகிகள் நம்மிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறும்போது, தென்னிந்தியாவில் உள்ள 3 ரயில்வே பணிமனைகளில் மிகப்பெரியது, பொன்மலையிலுள்ள லோகோ ஷெட் தான். இங்கு 10 நாள் இடைவெளியில் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 15 நாள் இடைவெளியில் பாசஞ்சர் ரயில்களும், 45 நாள் இடைவெளியில் சரக்கு ரயில்களும் சுத்தம் செய்து, ஏதாவது தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால் சரிசெய்வது வழக்கம். இதேபோன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில் என்ஜினை சுத்தம் செய்யும் பணியில் சீனியர் டெக்னீஷியனான எஸ். காளிதாஸ்,கிரேடு ஒன் டெக்னீஷியன் பி.மோகன்,கிரேடு 3டெக்னீஷியன்கள் ஓ.விஜூஸ், அசுதோஷ் குமார், அபிஷேக் குமார் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென சிமெண்ட் காங்கிரீட்டால் ஆன பாத் வே உடைந்து விழுந்தது. இதில் நின்று வேலைபார்த்த 5 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மோகன் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த பாத்வேயை சீரமைத்து தரவேண்டி, பொன்மலை லோகோ ஷெட்டின் முதுநிலை பணிமனை பொறியாளரிடம் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலதிகாரிகளின் மெத்தனப்போக்கு மற்றும் கவனக்குறைவே இதற்கு முக்கிய காரணம். இந்த சம்பவம் நடந்ததும் வேறு யாருக்கும் இதுகுறித்து தெரியாதபடி அந்த இடத் தை சுத்தம் செய்து காங்கிரீட் துண்டுகளை அப்புறப்படுத்துவதில் காட்டிய வேகத்தை, பாத் வேயை பராமரிப்பதில் காட்டி இருந்தால் இரண்டுபேருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்காது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள ஒவ்வொரு பிரிவிலும் சீரான இடைவெளியில் ஆய்வு நடத்தி எங்கள் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்தி தரவேண்டும் என்றனர். தேசிய அளவில் சிறந்த உற்பத்தி திறன் கொண்ட பணிமனை என்கிற விருதை பலமுறை பெற்றுள்ள பொன்மலை லோகோ ஷெட்டில் பராமரிப்பு இல்லாமல் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.