தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை (25- 03- 2024) தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20ம் தேதி தொடங்கிய நிலையில் அன்றைய தினம் முக்கிய வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
ஒரு சில சுயேச்சைகள் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் முக்கிய கட்சியான அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.