திருச்சி, காசிவிளங்கி மீன் மார்க்கெட்டில் பார்க்கிங் கட்டணம் கடும் உயர்வு:- வியாபாரிகள் கடையடைப்பால் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு…! (வீடியோ இணைப்பு)
திருச்சி, புத்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட் உறையூர் காசி விளங்கி என்ற பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு, மொத்தம் மற்றும் சில்லறை விலைகளில் மீன் வியாபாரம் நடந்து வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு திருச்சி மட்டுமன்றி அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.
இங்கு அதிகாலை 4 மணி முதல் மீன் வியாபாரம் களை கட்டும். இந்நிலையில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம். அவ்வாறு வரும் கன ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். மார்க்கெட்டுக்கு வெளியே தடுப்பு சுவர் ஓரம் நிறுத்தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது மீன் மார்க்கெட், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் பார்க்கிங் கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை கண்டித்தும், நுழைவு கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வியாபாரிகள் இன்று(05-04-2025) தங்களது கடைகளை திறக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.