திருச்சி மாவட்டம், திருவெள்ளரை பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம் – கோவிந்தா…கோவிந்தா… கோஷம் விண்ணதிர வடம் பிடித்த பக்தர்கள் !
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா மார்ச் 17-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவெள்ளறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு தினமும் காலையில் பெருமாள்-தாயார் மண்டகப்படிகளுக்கு சென்று வந்தனர். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேர்த்திருவிழாவை முன்னிட்டு 4 ம் நாள் பெருமாள் கருட வாகனத்திலும்,7-ம் நாள் பூந்தேரிலும், 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா இன்று (25-03-2025) நடைபெற்றது.
பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பெருமாள் பக்தர்களுக்கு திருத்தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா ரெங்கா, கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை தரிசனம் செய்தனர். திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் போலீசார் புறக்காவல் நிலையம் அமைத்து ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை 26-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்தவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் திருவெள்ளறை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.