Rock Fort Times
Online News

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது…!

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் நடைபெறும். அதேபோல இந்தாண்டுக்கான விழா இன்று(17-03-2024) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 8.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து காலை 9.25 மணிக்குள் மேஷ லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி 8 திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 9 மணிமுதல் 9.40 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 2ம்நாள் சுவாமி சூரியபிரபை வாகனத்திலும், அம்மன் சந்திரபிரபை வாகனத்திலும், 3ம் நாள் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி தேர்த்திருவிழா ஏப்ரல் 15-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 22-ந்தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 24-ந்தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்