Rock Fort Times
Online News

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு: இறந்த மூதாட்டி காதை அறுத்து 2 பவுன் நகை திருடிய மர்ம நபர்…!

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 70). இவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றுகாலை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி அவருடைய மகன் முருகன், மருமகள் மகாலட்சுமி ஆகியோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில், அவரது உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய வெளியே வந்தனர். பின்னர், வாகனம் வந்ததும் சந்திராவின் உடலை எடுப்பதற்காக அவர்கள் அங்கு சென்றபோது அவருடைய காது அறுக்கப்பட்டு அதில் இருந்து ரத்தம் சிந்திக் கிடந்தது. அத்துடன் அவர் அணிந்திருந்த கம்மல் கீழே கிடந்தது. மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி திருட்டு போயிருந்தது. விசாரணையில், சந்திராவின் உடலில் இருந்து சங்கிலியை திருடிய மர்ம நபர், அவருடைய காதை அறுத்து கம்மலை திருட முயன்றபோது, உறவினர்கள் வந்ததால், கம்மலை மட்டும் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதுபற்றி சந்திராவின் மருமகள் மகாலட்சுமி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து, அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்