Rock Fort Times
Online News

11 தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை… மனம் திறந்த ஓபிஎஸ்…!

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று(24-02-2026) தேனியில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு எனது மரியாதையும் வீரவணக்கமும். பாரதி கண்ட புதுமைப்பெண். தனது திட்டங்கள் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்த தன்னலம் பாராத உன்னத தலைவர். பிரிந்தவர்களை இணைத்து 1991-ல் ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினர். மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநிலத்தின் நிதியை கொண்டு நல திட்டங்களை செய்தவர் ஜெயலலிதா. கட்சிக்கு சோதனை வந்தபோது என்னிடம் முதல்-அமைச்சர் பதவியை கொடுத்தவர். அவர் இறந்தபிறகு என்னை கட்டாயப்படுத்தி முதல்-அமைச்சர் ஆக்கினார்கள். கட்டாயத்தின்பேரில் தான் நான் 3-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனேன். முதல் அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவுக்கு எந்த நம்பிக்கை துரோகமும் நான் செய்யவில்லை. ஜெயலலிதா தந்த முதல்-அமைச்சர் பணியை நிறைவாக முடித்த நிம்மதி, மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. அவரது புகழ், இந்த பூமி உள்ளவரை நிலைத்து இருக்கும். நடைபெற்ற 11 தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போதும் அதே நிலைமைதான். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, இறுதி நேரத்தில் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், மதியாதார் வாசலை மிதியாதே என ஒவையார் கூறியுள்ளார் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்