Rock Fort Times
Online News

கடலூரில் பாமக பந்த் -பஸ் கண்ணாடி உடைப்பு.

 கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தின் நில எடுப்பை கண்டித்து பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் கடலூரில் பதற்றம் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் சுரங்க விரிவக்க பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து நெய்வேலி அருகே உள்ள வளையமாதேவி, மேல்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராடி வந்தனர். இதனால் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மத்தியில் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்களில் சுரங்கப்பணிகளை என்.எல்.சி இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதனை கண்டித்து நேற்று முன் தினம் பாமக மற்றும் கிராம மக்கள் தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. நேற்று சேத்தியாத்தோப்பு அருகே சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் உள்ளிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று அதிகாலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இன்று முழு அடைப்புக்கு அழைக்கப்பட்டு இருந்தாலும் 100 சதவீத அரசு பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 30 சதவீதம் இயங்குகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.கடலூர் விருத்தாச்சலம் பண்ருட்டி பகுதிகளில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து காணப்பட்டாலும், திறக்கப்பட்டிருந்த சில கடைகள் வெறிச்சோடி இருந்தன.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்