Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்…. 6 பேருக்கு மறுவாழ்வு

திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மூளைசாவு அடைந்த நபரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், வரகூரைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலை விபத்தில், தலையில் ஏற்பட்ட படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் மே 28 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 29 ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். இதனையடுத்து அந்த நபரின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு சிறுநீரகம் தானமாக வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

இரண்டு கண்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டதையடுத்து உயிரிழந்தவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலுறுப்புகளை வழங்கிய உறவினர்களுக்கு பயன்பெற்றவர்கள் தரப்பிலும் மருத்துவர்கள் தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்