Rock Fort Times
Online News

கல்லூரிகளில் “ராகிங்” தடுப்புக்குழு அமைக்க உத்தரவு…

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஜூனியர் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்கள் 7 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் ராகிங் நடைபெறாதபடி அனைத்துக் கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்’’ என கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதபடி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ளவற்றை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல் வேண்டும். ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும்.

ராகிங் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டியினை அமைத்து ராகிங் கொடுமையினை அறவே ஒழிக்க கல்லூரி முதல்வரும், துறைத் தலைவர்களும் கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடந்த 2019ம் ஆண்டின் அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, மராட்டிய அரசின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் இருக்கும் ராகிங் தடுப்பு குழுக்களில் அக்கல்லூரியின் தலைமை மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பொதுத்துறை முக்கிய தலைவர்கள், போலீஸ் துறை, செய்தித்துறை, மாணவர்களின் பெற்றோர், மாணவர் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் கல்லூரிகளில் ‘ராகிங்’ குழுக்கள் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு செய்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளிடம் இருந்து ராகிங் குறித்த அறிக்கை ஒருவாரத்துக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்