ஓ.பி.எஸ்.என்றால் நினைவுக்கு வருவது விசுவாசம்; இபிஎஸ் என்றால் நினைவுக்கு வருவது துரோகம்…* மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மதுரையில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:- தாமதமாக வந்தாலும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். சில காலத்திற்கு முன்பு வரை ஒபிஎஸ் இங்கு இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். தாய் மடிக்கு நீங்கள் திரும்பியுள்ளீர்கள். எம்ஜிஆருக்கு நீங்கள் மட்டுமல்ல நானும் ரசிகன்தான். கழகம், எம்ஜிஆரை வளர்த்தது. அவரும் கழகத்தை வளர்த்தார். இந்த மேடை மிக வித்தியாசமான மேடை. ஓ.பன்னீர்செல்வம் என்றால் நினைவுக்கு வருவது விசுவாசம். எடப்பாடி பழனிசாமி என்றால் நினைவுக்கு வருவது துரோகம். பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிட்டது. அதிமுக கூட்டணி அல்ல. என்.டி.ஏ. கூட்டணி என்றுதான் பிரமதரே சொல்கிறார். இதை பார்த்துவிட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமாரை பாஜக பந்தாடிவிட்டது. நிதிஷ்குமார் பதவி விலகும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவார். நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டுள்ள நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படப் போகிறது. தென் மாவட்டங்களில் வளர்ச்சி இல்லை என்ற நிலையை திமுக மாற்றியுள்ளது. மதுரைக்கு 6,000 கோடி ரூபாய்க்கு சிறந்த உட்கட்டமைப்பு திட்டங்களை செய்துள்ளோம். பார்த்துப்பார்த்து திட்டம் தீட்டி மக்களுக்கு கொடுத்தால் அது திமுக. மக்களிடமிருந்து பணம் பறித்தால் அது பாஜக. அறிவித்து 10 ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனையை அவர்களால் கட்டி முடிக்க முடியவில்லை. கடந்த தேர்தலை விட இப்போது கூடுதல் பலம் பெற்றுள்ளோம். திமுகதான் வெற்றிபெறப் போகிறது என பாஜகவே நினைக்கிறது. ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டுமே என்ற விரக்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி கிளம்பி விட்டார். அனைவரும் கடுமையாக உழையுங்கள். நாம் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் வழங்கப்படும். வெல்வோம் ஒன்றாக. நன்றி.” இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments are closed.