Rock Fort Times
Online News

தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்…!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள். பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதனால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பிறகு அவை கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர். இந்த முட்டுக்கட்டைக்கு தீர்வுகாண நேற்று மாலை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து 9-ந் தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கார்ப்பரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்