திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 250 ஆட்டோக்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்- ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தல்…!
திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை (ஜூலை 16) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தப் பேருந்து முனையத்தில் 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த வசதிகள் உள்ளன. இதுமட்டுமின்றி 1,935 இருசக்கர வாகனங்கள், 216 காா்கள், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. நாளை முதல் மாநகர் மற்றும் புறநகர அனைத்து அரசு பேருந்துகளும் பஞ்சப்பூரிலிருந்து இயக்கப்படுகிறது. இந்தநிலையில் பஞ்சப்பூர், எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி, மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250 ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறந்த பின்பு அங்கே தங்களது ஆட்டோக்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர். நாளை பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் 500 ஆட்டோ ஓட்டுநர்கள் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இதனை அறிந்த பஞ்சப்பூரை சுற்றியுள்ள 250 ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை ஒரே நேரத்தில் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்து உள்ளனர். அப்போது அவர்கள் ஆட்டோக்களுக்கு என இதுவரை இடம் ஒதுக்கவில்லை என்றும், மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இங்கே அனுமதி அளிக்காமல் அவர்களுக்கு அங்கேயே ஆட்டோக்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்றும், எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர். தங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
Comments are closed.