Rock Fort Times
Online News

ஒருவரின் மனோபாவம் தான் வாழ்க்கையின் உயரத்தை நிர்ணயிக்கிறது- பட்டமளிப்பு விழாவில் எக்ஸெல் குழுமங்களின் தலைவர் முருகானந்தம்…!

உயர்கல்வியின் மைல்கல்லாக விளங்கும் திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தேசிய கல்லூரி (தன்னாட்சி)யில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு படித்து முடித்த மாணவ, மாணவிகள் பலர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் வேலை பார்த்து வருகின்றனர். பலர் தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த கல்லூரியில் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ரகுநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும், சர்வதேச ரோட்டரி சங்க இயக்குனருமான எம்.முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 650 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பட்டமளிப்பு நாள் என்பது மாணவர்கள் தங்கள் தகுதிகளைப் பெறுவதற்குச் செய்த அனைத்து நேரம், ஆற்றல் மற்றும் உழைப்பின் உச்சம். ஒருவரின் மனோபாவம் தான் வாழ்க்கையின் உயரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு செயலை செய்து முடிப்பதை விட அடுத்த செயலை தொடங்குவது அதைவிட நல்லது. எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியம். இந்த உலகத்தில் மிகப்பெரிய விஷயங்களை செய்து விட முடியாது. ஆனால், சிறிய விஷயங்களை அன்போடும், அக்கறையோடும் செய்துவிட முடியும் என்று மதர் தெரசா கூறியுள்ளார். நீங்கள் வருங்காலத்தில் நல்ல உயரத்தை அடைய என் வாழ்த்துக்கள். அப்போது நீங்கள் உங்களது பெற்றோர்களையும், தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த கல்வி நிறுவனத்தையும், பேராசிரியர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். விழாவில், கல்லூரி துணை முதல்வர்கள் இளவரசு, பிரசன்ன பாலாஜி மற்றும் பென்னட், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்