திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது …
3 பேருக்கு வலைவீச்சு..
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதில், 2 குண்டுகள் வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகுல் (22), குணசேகரன் மகன் சச்சின் (24),ராஜசேகர் மகன் ராக்கி என்கிற ராகேஷ் (22), கீழ கல்கண்டார்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் லோகேஷ் (23) ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் லோகேஷை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அதிகாலை 4 மணி அளவில் பெட்ரோல் நிரப்பிய பீர் பாட்டில்களை ரவிச்சந்திரன் வீட்டில் வீசியதாக தெரிவித்துள்ளார். மேலும், வீட்டின் அருகில் உள்ள பாலக்கட்டையில் தினமும் மாலை நேரங்களில் இவர்கள் 4 பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் இதனை ரவிச்சந்திரன் கண்டித்து வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அவரை பயமுறுத்துவதற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.