Rock Fort Times
Online News

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் காவல் கட்டுப்பாட்டு அறை:* மாநகர போலீஸ் கமிஷனர் காமினி திறந்து வைத்தார்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரதோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீபாவளி பொருட்கள், ஆயத்த ஆடைகள் வாங்கவரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். மேலும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்திகோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் இன்று(அக்.10) தொடங்கி வருகிற தீபாவளி வரை செயல்பாட்டில் இருக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் காமினி., மேற்கண்ட பகுதிகளில் 1327 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 114 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய வாகனங்களும், சுழலும் கேமராக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

கட்டுப்பாட்டு அறையிலும், புற காவல் நிலையத்திலும் இதற்காக தனி குழுக்கள் செயல்படுவார்கள். குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து செயல்படுவார்கள் என தெரிவித்தார். ஒருவார காலத்திற்கு போக்குவரத்து காவலர்கள் 50 பேரும் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் 50பேரும் என 100பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பண்டிகை நெருங்கும் சமயத்தில் ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் கூடுதலாக பணி அமர்த்தப்படுவார்கள் மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தை பயன்படுத்துவதற்காக மாநகராட்சியுடன் இணைந்து நாளைமுதல் அதற்கான நடவடிக்கை எடுப்போம். அதே நேரம் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். பாதுகாப்புடன் வந்து பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்கிச்செல்லவும், அதேநேரம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காவல்துறையை அணுகலாம். தமிழக அரசால் கூடுதலாக திருச்சி மாநகரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது பண்டிகை காலத்தில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். அதே நேரம் திடீர் கடைகளை அப்புறப்படுத்த திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு காவல்துறை உரிய ஒத்துழைப்பு அளிக்கும். தீபாவளி பண்டிகைக்காக 306 பட்டாசு கடைகள் அமைப்பதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், மாநகராட்சி தரப்பில் வரவேண்டிய சான்றிதழ்கள் கிடைத்தபிறகு அவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களில் உரிமம் வழங்கப்படும். பெரிய கடைவீதி பகுதிகளில் பொருட்கள் இறக்குவதற்காக கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் உள்ளே வர அனுமதி இல்லை. அதே நேரம் இரவு எட்டு மணிக்கு பிறகு அனுமதிக்கலாம். கூட்டம் சென்ற பிறகு அனுமதிக்கப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்