துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு ‘பொற்கிழி’…* அமைச்சர்கள் அன்பில் மகேஷ், வெள்ளகோவில் சாமிநாதன் வழங்கினர்!
தமிழக துணை முதல்வர் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம், மாநகர இளைஞர் அணிகளின் சார்பாக மூத்த முன்னோடிகள் 48 பேருக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா திருச்சி பொன்னையா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதோடு ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ்குமார், மாநகர அமைப்பாளர் முத்துதீபக் மற்றும் நிர்வாகிகளை அமைச்சர்கள் பாராட்டினர். அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டதோடு 100 மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகோபால், மாநகர அமைப்பாளர் கலைவாணி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Comments are closed.