Rock Fort Times
Online News

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.31 கோடியில் நலத்திட்ட உதவிகள்…! * மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வழங்கினார்

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வு திருச்சி, கலையரங்கம் அரங்கத்தில் ஒளிபரப்பானது. அதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் தலைமை வகித்து ரூ.31.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். இதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ. 8.22 லட்சத்திலும், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின்கீழ் 11 பேருக்கு ரூ.55 லட்சமும், பிரதம மந்திரி அனுசுசித் ஐதி அபியுதாய் யோஜனா திட்டத்தில் 173 பேருக்கு ரூ. 86.50 லட்சத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 24 பேருக்கு ரூ. 24 லட்சத்தில் தாட்கோ கடனுதவிகளும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ. 65.59 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை துறையின் சார்பில் பராம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 250 பேருக்கு ரூ. 76.03 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் கனவு இல்லம் (2025-26) திட்டத்தில் 628 பேருக்கு ரூ.21.98 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், சமூக நலத்துறையின் சார்பில் ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 85 பேருக்கு ரூ. 51.72 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பேருக்கு ரூ. 10.18 லட்சத்தில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் திட்டத்தின் கீழ் 782 பேருக்கு ரூ.3 கோடியில் கடனுதவிகள் உள்பட மொத்தம் 5,075 பயனாளிகளுக்கு ரூ.31.18 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் வே.சரவணன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரிணி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொ) எஸ்.ஜெயசித்ரகலா, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ரெங்கராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயகுமார், ஆதிதிராவிட நலத்துறை கண்காணிப்பாளர் இளம்பரிதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்