திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் தலமான உத்தமர்கோவிலில் வைகாசி தேரோட்டம் கடந்த மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு பிச்சாண்டேஸ்வரர் அனுதினமும் மாலை 7 மணிக்கு பூத வாகனம், சேஷ வாகனம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(08-06-2025) விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலை 7 மணிக்கு பிச்சாண்டேஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து ஓம்..சிவாயா.. நம் சிவாயா…என பக்தி கோஷங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நான்கு மாட வீதிகளில் தேர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன், கோவில் தக்கார் சுரேஷ், செயல் அலுவலர் புனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.