கடந்த மாதம் 2-ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மேற்கு வங்கம் ஷாலிமாலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் மற்றொரு பாதையில் வந்த பெங்களூரு ஹவுரா விரைவு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியது. 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 293 பேர் பலியாகினர். 1200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் இதற்கு காரணமான ரயில்வே துறையின் சீனியர் பொருளாளர் அருண் குமார் மஹந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், தொழில்நுட்ப வல்லுனர் பப்புகுமார் ஆகியோரை கடந்த வாரம் கைது செய்தனர். கொலை வழக்கு இல்லாமல் மரணத்தை விளைவிக்கும் குற்றம் மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இந்நிலையில் விபத்து நடந்த பகுதியை நேற்று நேரில் பார்வையிட்ட தென்கிழக்கு ரயில்வே பிரிவின் துணை மேலாளர் அனில்குமார் மிஸ்ரா கூறுகையில், கைது செய்யப்பட்ட 3 பேர் உட்பட விபத்துக்கு காரணமாக இருந்த 7 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உஷாராக இருந்திருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்றார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 ஊழியர்களும் நேற்று முன்தினம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, மேலும் 4 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சமீபத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் கடந்த 2018 சிக்னல் அமைக்கும் பணிகள் நடந்த போது முறைகள் பின்பற்றப்படவில்லை. சிக்னல் கோளாறால் ஏற்பட்ட விபத்துக்கு மனித தவறே காரணம் என குறிப்பிட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.