தமிழகத்தில் உள்ள சுகாதார செவிலியர் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என திண்டுக்கல்லில் நடந்த செவிலியர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் இந்திரா தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாத்திமா மேரி, பொருளாளர் நீலா,செயலாளர் மாரியம்மள், துணை தலைவர் ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் இந்திரா கூறியதாவது: காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வரவேற்புக்குரியது. அதற்காக துணை சுகாதார நிலையங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 80 சதவீதம் துணை சுகாதார நிலையங்கள் பழுதடைந்த கட்டிடங்களாக உள்ளன. இவற்றை சரி செய்வதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். அரசு ஒதுக்கும் நிதிகள், முறையாக வந்து சேர்வதில்லை. ஆபத்தான முறையில் உள்ள கட்டிடங்களில் சுகாதார செலியர்கள் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பல தனியார் கட்டிடங்கள், துணை சுகாதார நிலையங்களாக செயல்படுகின்றன. இதில் சுகாதார செவிலியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர் . இதை மக்களை தேடி மருத்துவமாக பயன்படுத்துவதால் சுகாதாரத் கேடு ஏற்படுகிறது. தமிழகத்தில் தான் மருத்துவம் சிறப்பாக உள்ளது. எங்களுடைய கோரிக்கை 20 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பதவி உயர்வு உட்பட பல பலன்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. 34 ஆண்டுகளுக்கு பின்பு தான் செவிலியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. பட்ஜெட்டில் எங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மாநில செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது. இவ்வாறு கூறினார்.