யாதவர்களை ஒதுக்கிவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது… தமிழ்நாடு யாதவ மகாசபை மாநாட்டில் தலைவர் நாசே.ராமச்சந்திரன் பேச்சு
கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அதிகாரத்தில் பங்களிப்பு என்பதே மாநாட்டின் நோக்கம். அரசியல் கட்சியினர் யாரும் யாதவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது என்று தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் நடந்த யாதவர் எழுச்சி மாநாட்டில் அதன் தலைவர் நாசே.ராமச்சந்திரன் பேசினார்.
தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் யாதவர் எழுச்சி மாநாடு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூர் அருகே நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் நாசே.ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரபிரதேச எம்.பி. ஷியாம்சிங் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்தர் யாதவ், உத்தரபிரதேச மாநில முன்னாள் எம்.பி. சுக்ராம்சிங் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தந்தையில்லாத யாதவ மாணவ-மாணவிகளை தத்தெடுக்கும் திட்டத்தை அகில இந்திய யாதவ மகாசபை முன்னாள் தலைவர் உதய்பிரதாப்சிங் யாதவ் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில், தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். மக்கள்தொகையின் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகைகள் மற்றும் முன்னுரிமை அளித்தல் வேண்டும். யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதுவரை யாதவர்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலவாரியம், பால் வள மேம்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். மாவீரன் அழகுமுத்துக்கோனின் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். அவரது வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்த்திட வேண்டும்.
மத்திய அரசு, ராணுவத்தில் யாதவர் ரெஜிமெண்ட்டை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் யாதவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து, மாநாட்டுக்கு தலைமை வகித்து மாநில தலைவர் நாசே ஜெ. ராமச்சந்திரன் பேசியதாவது:- யாதவ இனத்துக்கு மிகப்பெரிய வரலாறு, பாரம்பரியம் உள்ளது. பலர் ஆண்ட இனம் எனக் கூறி வருகின்றனர். ஆனால், ஆண்டவரே பிறந்த இனம் நமது யாதவ இனத்தில்தான். எங்களது இனத்தவர் மீது தாக்குதல் நடத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து யாதவர்களும் வீதிக்கு வந்து போராடுவோம். சிறை செல்லவும் தயங்க மாட்டோம். நிலவுக்கு சந்திராயன் அனுப்பிய பெண்களில் ஒருவர் எங்களது சமுதாயத்தை சேர்ந்தவர். நாங்கள் ஆடு மேய்ப்பவர்களாகவும் இருப்போம். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் விஞ்ஞானியாகவும் இருப்போம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அதிகாரத்தில் பங்களிப்பே இந்த மாநாட்டின் நோக்கம். அரசியல் கட்சியினர் யாதவர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து பகுதிகளிலும் யாதவ மகா சபையை பலப்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாநாட்டுக்கு வந்தவர்களை மாநில பொதுச்செயலாளர் வேலு மனோகரன் வரவேற்றார். இதில் அகில் இந்திய யாதவ மகாசபை முன்னாள் தலைவர் உதய் பிரதாப் சிங், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் எஸ்.துரை, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பேராசிரியர் சூரஜ் மண்டல், முன்னாள் எம்.பி.க்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், சுக்ராம் சிங் மற்றும் மாநாட்டு அமைப்பாளர்கள் தமிழ்செல்வம், ஸ்ரீதர்,முத்தையா. திருச்சி மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனக்கோடி, தொழிலதிபர் ஜெயகர்ணா, வழக்கறிஞர் இரா.வைரமுத்து மற்றும் திரளான யாதவ மகா சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர்கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாநில பொருளாளர் கே. எத்திராஜ் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.