Rock Fort Times
Online News

“இதற்கு மேலும் வலிமை இல்லை, மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன்”- வினேஷ் போகத் உருக்கமான பதிவு…!

ஒலிம்பிக்கில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்திலிருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக  அறிவித்திருக்கிறார்.  வினேஷ் போகத் நடப்பு ஒலிம்பிக்ஸின் மல்யுத்தத்தில் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டார். ஆரம்பத்திலிருந்தே மிகச்சிறப்பாக ஆடி வந்தார்.  ரவுண்ட் ஆப் 16 சுற்றில் தோல்வியையே அறியாத ஜப்பான் வீராங்கனை சுசாகியை அற்புதமாக வீழ்த்தியிருந்தார். அப்போதே இந்த ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத் சாதிக்கப்போகிறார் எனும் நம்பிக்கை உருவானது. அதன்படியே அவர் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனைக்கு எதிராக கடுமையாகப் போராடி சவாலான அந்தப் போட்டியை  7–5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனைக்கு எதிராக மேலும் ஆதிக்கம் செலுத்தி
5-0 என வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். பதக்கத்தையும் உறுதி செய்தார்.
ஆனால்,  இறுதிப்போட்டிக்கு முன்பாக நடந்த பரிசோதனையின் போது வினேஷ் போகத் அவர் இருக்க வேண்டிய 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடையோடு இருந்தது தெரிய வந்திருக்கிறது. எடை சரிபார்க்க வீரர் வீராங்கனைகள் வராமல் இருந்தாலோ, அந்த எடைப்பிரிவிக்கு அதிகமான எடையில் இருந்தாலோ அவர்கள் முழுமையாக போட்டியிலிருந்தே தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலும், அந்தத் தொடரின் கடைசி இடம் மட்டுமே அந்த வீராங்கனைக்கு வழங்கப்படும். இதுதான் விதிமுறை. இதன்படியே வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  அவருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவுமே  நின்றுகொண்டிருக்கும் இந்த சமயத்தில் திடீரென அவர் மல்யுத்தத்தில் இருந்தே ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருக்கிறார்.  இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  அம்மா…மல்யுத்தம் என்னை வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். உன்னுடைய கனவு என்னுடைய நம்பிக்கை எல்லாமே உடைந்து விட்டது. என்னிடம் இதற்கு மேலும் வலிமை இல்லை.  மல்யுத்தத்தில் இருந்து விடைபெறுகிறேன்.  உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.  தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என கூறியிருக்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்