தமிழகத்தில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற டிலைட் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைபடுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1 சதவீதம் கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு தேவையற்ற ஒன்றாகும். பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை. எனவே தான் ‘Aavin for Healthy TN’என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல் அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் எதுவும் லாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை. இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என்றார். இந்தநிலையில், இன்று ஆவின் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும். மாதாந்திர அட்டைதாரர்களுக்கு டிலைட் பால் 500மி ரூ.21- க்கு விற்பனை செய்யப்படும். மழைக் காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி ஆவின் டிலைட் பால் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.