Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து ஹைதராபாத், சென்னைக்கு புதிய விமான சேவை- நிலைய இயக்குனர் தகவல்…!

திருச்சியிலிருந்து ஹைதராபாத், சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கோடை காலம் முதல் சேவை தொடங்க உள்ளதாக விமான நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடுபாதையை நீட்டிப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. இதன்மூலம் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து ரக விமானங்களும் வந்து செல்ல முடியும். நிலைய மேம்பாட்டுக்கு 512.59 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மட்டும் 96 சதவீத நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான பணிகள் தொடங்கப்படும். கையகப்படுத்திய நிலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.18.65 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும். திருச்சியில் புதிய விமான நிலைய முனையத்தை அடுத்து புதிய கட்டுப்பாட்டு கோபுரம் (ஏடிசி டவர்) மற்றும் தொடர்புடைய பணிகள் ரூ.60.75 கோடியில் நடந்து வருகின்றன. இவை மே 2025 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த 2024 ம் ஆண்டில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 15% வளர்ச்சியும், சரக்குப் போக்குவரத்து 13% வளர்ச்சியும் அடைந்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை மேம்படுத்தும் வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், கோடை காலத்தில் ஹைதராபாத், சென்னைக்கு தினசரி சேவைகளை இயக்கவுள்ளது. சரக்கு முனையமும் நாள் முழுவதும் தடையற்ற வகையில், 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்