Rock Fort Times
Online News

திருச்சி சிந்தாமணி- மாம்பழச்சாலை இடையே ரூ.120 கோடியில் அமைகிறது புதிய பாலம்!

இடிக்கப்படும் எம்எல்ஏ அலுவலகம், மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்று இடம் தர முடிவு!

திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1976-ம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சிதிலமடைந்த அந்த பாலம் மராமத்து பணியால் மறு ஜென்மம் எடுத்தது நினைவிருக்கலாம். அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்துக்கேற்ப இவ்வழித்தடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மற்றொரு பாலம் கட்ட அமைச்சர் கே.என்.நேரு முயற்சி மேற்கொண்டார். அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே மேற்குப் பக்கத்தில் ரூ.120 கோடி செலவில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அண்மையில் திருச்சி வந்து, புதிய காவிரிப் பாலம் அமைய உள்ள பகுதிகளைப் பார்வையிட்டார். தற்போதுள்ள காவிரிப் பாலத்தின் மேல்புறத்தில் 5 அடி தொலைவில் 14 தூண்களுடன் 18 மீட்டர் அகலம், 544 மீட்டர் நீளத்தில் 4 வழிப்பாதையாக புதிய பாலம் கட்டப்படவுள்ளது .இதற்காக, சிந்தாமணி, மாம்பழச்சாலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணியின் போது மாம்பழச்சாலை  சிக்னலை ஒட்டியுள்ள ஸ்ரீரங்கம் எம்எல்ஏ அலுவலகம், அதன் அருகிலுள்ள ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி) அலுவலகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதேபோல சிந்தாமணி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கோயில் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ கையகப்படுத்தும் நிலங்களுக்கான இழப்பீடு மற்றும் இடிக்கப்படும் அரசு அலுவலகங்களுக்கு மாற்று ஏற்பாட்டுக்கான மதிப்பீட்டு தொகையாக ரூ.10 கோடி வரை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடங்களை இடிப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம். அமைச்சர் கே.என்.நேரு முழு முயற்சி மேற்கொண்டுள்ளதால், விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு பணிகள் தொடங்கப்படும்” என்றனர். புதிய பாலம் அமைக்கப்படும் போது மீண்டும் காவிரி பாலத்தில் பயணத்தடை போன்ற சிக்கல்கள் ஏற்படாதவாறு விரைந்து பாலப் பணியை முடிக்க வேண்டும் என்று திருச்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்