சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தை தடுத்து மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தரும் வகையில், பீஜப்பூர் – சுக்மா எல்லையில் உள்ள தெகல்குடெம் என்ற கிராமத்தில் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது. மேலும், நக்சலைட்டுகளின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர்.
இதைத் தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா – பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. இந்தநிலையில் நேற்று சுக்மா மாவட்டத்தில் உள்ள தெகல்குடெம் கிராமத்தில் நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த வீரர் தேவன் உட்பட மூன்று பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு, நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 14 பாதுகாப்புப் படையினரும் உயர் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.