இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தலைதூக்க தொடங்கியுள்ளது. நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 14 ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சுற்றி வளைத்துள்ளனர். 4 படகுகளில் அதிவேகமாக வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் பாய்ந்து அவர்களை கூர்மையான கத்தியால் தாக்க தொடங்கியுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் கொலைவெறி தாக்குதலில் தமிழக மீனவர் முருகன் என்பவாின் இடது கையின் மூன்று விரல்களை வெட்டியுள்ளனா்.பட்டாக்கத்தி, இரும்பு கம்பிகள், கட்டைகள் கொண்டு படகில் இருந்த மற்ற மீனவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், தூண்டில் வலைகள் உள்ளிட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு பாதிக்கப்பட்ட மீனவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கொண்டுவரப்பட்ட மீனவர்களை கண்டுமருத்துவமனையில் குவிந்திருந்த மீனவ பெண்கள் அவர்களின் நிலையை கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் விரல்கள் வெட்டப்பட்ட மீனவர் முருகன் நாகையில் இருந்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று நாகை மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனா். பலத்த ஆயுதங்களுடன் கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், எதிர்த்து பேசினாலே கடுமையாக தாக்கினார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவ கிராம மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.