திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பாஜக -இந்து அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கைது- மண்டபத்தில் போதிய இடம் ஒதுக்காததால் சாலை மறியல்…!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து “வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு” சார்பில் நாடு தழுவிய அளவில் இன்று(04-12-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் திருச்சி மரக்கடை பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் , மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன் மற்றும் உரிமை மீட்பு குழுவினர் திரளாக பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில், அகில பாரதிய வித்யா பரிஷத் மாநில இணை அமைப்பாளர் சந்தோஷ், பாஜக இளைஞரணி மாநில செயலாளர் நாகராஜன், மாநில மகளிர் அணி துணை தலைவி புவனேஸ்வரி, பாரதிய மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் , விசுவ இந்து பரிசத் மாவட்ட தலைவர் சுதாகர், இந்து முன்னணி கோட்ட செயலாளர போஜ ராஜன், புறநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்பி ராஜேந்திரன், பொன்னுவேல், சபரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மதுரை ரோட்டில் உள்ள ஒரு மஹாலில் அடைத்தனர். பாதிக்கும் மேற்பட்டவரை வேறு மண்டபத்தில் அடைக்க போலீசார் பஸ்ஸில் அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு பாஜக நிர்வாகிகள் ஒப்புக்கொள்ள மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மண்டபத்தின் முதல் மாடியை திறந்து விட நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் 300-க்கும் மேற்பட்டவர் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments are closed.