கடந்த 10 ஆண்டுகளாக சர்வாதிகாரி போல செயல்படுகிறார் மோடி- காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு…!
தஞ்சையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்வார்களோ அதுபோல பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பிஜேபியையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண், சமூக நீதிக்கான மண். இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து, பார்த்து எடுத்து வைத்தார். தற்போது கச்சத்தீவு பேசும் பொருளாக இருக்கிறது. ஆனால், வெஜ் பேங்கை இந்திராகாந்தி இந்தியாவுடன் இணைத்தார். அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலை நிமிர்ந்தது. அண்ணாமலை தமிழர் நலனுக்கு எதிராக இருப்பவர், தமிழகத்தை காட்டிக் கொடுப்பவர் என்று கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.