மழை வெள்ள காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க திருச்சி மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் மழைநீர் கால்வாய்களில் தேங்கி உள்ள குப்பை கழிவுகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல, பாதாள சாக்கடையில் உள்ள குப்பைகள் மற்றும் மண் கழிவுகளை அகற்றுவதற்காக நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் திருச்சி மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகளை மொத்தமாக உறிஞ்சி எடுத்து பின்னர் குப்பை மற்றும் மண் கழிவுகளை மட்டும் தனியாக சேகரித்துக்கொண்டு மீண்டும் தண்ணீரை மட்டும் பாதாள சாக்கடையில் விடும் வசதி கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் இல்லாமல் மழைக்காலங்களில் தண்ணீர் எளிதாக செல்வதுடன் குடியிருப்பு பகுதி மற்றும் சாலைகளில் தேங்கும் நிலை இருக்காது. இந்த நவீன நீர் உறிஞ்சும் எந்திரம் மூலம் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் கோர்ட்டு அருகில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண் கழிவுகள் அகற்றப்பட்டது. இந்த பணியின் போது நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் கே.எஸ். பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், இளநிலை பொறியாளர் பாவா பக்ருதீன், கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர். ரூ. 3 கோடி மதிப்பிலான இந்த நவீன எந்திரம் இன்னும் முழுமையாக வாங்கப்படவில்லை. முதல் கட்டமாக வாடகைக்கு எடுத்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக திருச்சி மாநகராட்சிக்கு முழுமையாக வாங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.