Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 10-வது வார்டில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு- வதந்திகளை நம்பாமல் குடிநீரை குடிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்…!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு மின்னப்பன் தெரு பகுதிகளில் கடந்த வாரம் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்ததாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்பதும், அந்த பகுதியில் நடந்த திருவிழாவின்போது அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும், இறந்தவர்களின் உயிரிழப்புக்கு சில உடல் நல பிரச்சினைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். இந்தநிலையில் அமைச்சர் கே.என்.நேரு 10-வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அப்பகுதி மக்களிடம் குடிநீர் எவ்வாறு வருகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. உயிரிழந்தவர்களுக்கு வேறு சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தது என்பதை அவர்களின் குடும்பத்தினரே ஒப்புக் கொண்டுள்ளனர். மக்கள் எந்த அச்சமும் இன்றி வதந்திகளை நம்பாமல் குடிநீரை குடிக்கலாம். இங்குள்ள ஒரு பகுதியில் மட்டும் மக்களின் அச்சம் காரணமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. அந்த பகுதியிலும் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்