திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கும், தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கும் வழங்கினார். திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கும், அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கும், காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு ம், முத்தமிழ்க் காவலர் கி.ஆபெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு ம் வழங்கினார். இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கும் வழங்கினார். விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Comments are closed.