பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு, திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருச்சி, காமராஜர் சிலையிலிருந்து மௌன ஊர்வலமாக சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2026-ல் ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். திமுக அரசு மக்களின் மனங்களை வென்றதால்தான் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதாகவும் கூறினார். தொடர்ந்து, “அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு” என நடிகர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “அது அவர்களின் கட்சி சார்ந்த ஆண்டு விழாவில், அவர்களது தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது. திமுக மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான பதிலே தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது” என்று அமைச்சர் விளக்கமளித்தார். மேலும் மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், 41 சதவிகித நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த அளவிலேயே நிதி வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதனால் பள்ளிக் கல்வித்துறை, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகள், ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Comments are closed.