துவாக்குடிக்கு 4 ஆண்டுகளில் ரூ.62 கோடி செலவில் நலத்திட்டங்கள் பட்டியலிட்டார்…- அமைச்சர் அன்பில் மகேஷ் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 72வது நிகழ்வாக பிறந்தநாள் நிறைவு பொதுக்கூட்டம் துவாக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு துவாக்குடி நகரக் கழக திமுக செயலாளரும் நகர் மன்ற தலைவருமான காயாம்பு தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி., இன்று அமைச்சராக நான் இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் திருவெறும்பூர் தொகுதி மக்கள்தான். காரணம், 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்னை சுமார் 49,767 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ததால் மட்டுமே அமைச்சர் என்ற பதவியில் இன்று இருக்கிறேன். இதற்கு முழுமுதற் காரணம் நீங்கள்தான். வெற்றி பெற்ற இந்த நான்கு ஆண்டுகளில், துவாக்குடி பகுதியில் மட்டும் சாலை அமைத்தல், குளங்கள் மேம்படுத்துதல், மழைநீர் வடிகால் வசதி, குடிநீர் வசதி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், புதிய பள்ளி கட்டிடம் கட்டுதல், பயணியர் நிழற்குடை, முதலமைச்சர் காலை உணவு திட்ட மைய சமையல் கூடம் அமைத்தல் என ரூ.62 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை செய்திருக்கிறோம் என கூறினார். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன், நகர கழக அவை தலைவர் ஸ்டீபன் ராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் எஸ். செல்வம் மற்றும் துவாக்குடி நகரக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.