Rock Fort Times
Online News

திருச்சி, காட்டூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதி 37, 37 ஏ, 38, 38 ஏ ,39, 39 ஏ,40, 40 ஏ ஆகிய வார்டு மக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது அமைச்சர் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் காட்டூர், திருவெறும்பூர் பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம், தாமரைக் குளம் சீரமைத்தல், வாய்க்கால் தடுப்பு சுவர் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகளை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்து முடித்துள்ளோம். அதிகாரிகளை தேடி பொதுமக்கள் சென்ற நிலை மாறி பொதுமக்களை தேடி நாங்கள் வந்துள்ளோம் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார். முகாமில், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார், மாநகராட்சி ஆணையர் வி.சரவணன், துணைப் பொறியாளர் ஜெகஜீவன்ராம்,  வட்டாட்சியர் ஜெயபிரகாஷம், தமிழ்நாடு மின்வாரிய துணை நிர்வாக இயக்குனர் காளிதாஸ், மாமன்ற உறுப்பினர்கள் தாஜுதீன், ரெக்ஸ், வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்மணி, மன்சூர் ,வினோத் கனகராஜ், செல்வராஜ், அருண், குணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்