சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், அதிகாரப்பூர்வமற்ற இணையதள வேலைவாய்ப்பு குறித்து விளக்கம் அளித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின் போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே, வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பி குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணைய தளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை, விளம்பரங்களை நம்பி அதிகாரபூர்வமற்ற தனியாரிடம் வேலை தேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.