காங்கிரஸ் தலைவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து எம்.பி., எம்.எல்.ஏ. ‘சீட்’ வழங்கக்கூடாது…!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை
அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கே ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்பது அகில இந்திய தலைமைக்கு விதிவிலக்காகும். ஆனால், பல மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தொடர்ந்து கொடுப்பதால் அந்தந்த மாநிலத்தில் உள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கட்சி வளர்ச்சி அடையாமல் இருப்பதுடன், தொண்டர்களிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது. எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தலைவர்களின் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் இருந்தால் அதே குடும்பத்தில் உள்ளவருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக காங்கிரஸின் தொண்டர்களின் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதில் தலையிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.