மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று( 02.05.2023) காலை 8.40 மணிக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் புதிதாக திருமாங்கல்ய சரடு மாற்றி மகிழ்ந்தனர். விழாவை ஒட்டி விரிவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
அதனைத்தொடர்ந்து எட்டாம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று 9-ம் நாள் திக்குவிஜயத்தை முன்னிட்டு காலையில் மரவர்ணச் சப்பரத்தில் எழுந்தருளினர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.
பத்தாம் நாளான இன்று மேற்கு வடக்கு ஆடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் காலை 8.40 மணிக்கு நடைபெற்றது.. இதற்காக திருக்கல்யாண மேடையை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், தாய்லாந்துலிருந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் உள்பட சுமார் 10 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இவர்களுக்கு உதவி செய்யும் பூக்கள் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஈடுபட்டனர்.. வாழைமரத் தோரணங்களும் கோயில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.
இந்த திருக்கல்யாணத்தில் கட்டண தரிசனம் 6 ஆயிரம் பேர், கட்டணமில்லா தரிசனம் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் அமரும் வகையில் தகரப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. திருக்கல்யாணத்தில் பங்கேற்ற திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலையில் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி இன்று அதிகாலை 6 மணியளவில் கோயிலை வந்தடைந்தனர். திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 11-ம் நாள் ( 03.05.2023 ) நாளை தேரோட்டங்கள் நடைபெறும். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனித் தேரில் எழுந்தருள்வர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுப்பர். மாசி வீதிகள் எங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர்.மே 4ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் அருணாச்சலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.