திருச்சியில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட மருத்துவ பிரதிநிதி கைது…!
திருச்சி,சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதாண்டாகுறிச்சியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகன் அனி பவுல்ராஜ். (வயது 50).தற்காலிக மருத்துவப் பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.தற்காலிக பணி என்பதால் போதிய ஊதியம் கிடைக்கவில்லை.நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்,ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார்.இதனால், குறுக்கு வழியை தேர்ந்தெடுத்த அவர் கள்ள நோட்டு அச்சடிப்பது என முடிவு செய்தார்.இதற்காக, இன்டர்நெட்டில் விபரங்களை சேகரித்தார்.கள்ள நோட்டு அடிக்க தேவையான கலர் பிரிண்டர்,இங்க்,வெள்ளை பேப்பர் ஆகியவற்றை வாங்கினார்.பின்னர் கள்ள நோட்டை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். கள்ள நோட்டால் அவரது வாழ்க்கை செழிப்படைந்தது.வெளிநாடுகளுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டார்.அவரது நடவடிக்கைகள் அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.மேலும், அப்பகுதியில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.எஸ்.பி.உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் வேலழகன்தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று ( ஏப்ரல் 29) ஆளவந்தான் நல்லூர், மேட்டுத் தெரு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அனி பவுல்ராஜை தனிப்படையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது,அவரது சட்டை பையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது வீட்டிலிருந்து கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், இங்க், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் அனி பவுல்ராஜ் மீது BNS178,179, 180, 181 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments are closed.