தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஒரு காலத்தில் திமுகவுக்கு எதிராக செயல்பட்ட மதிமுக தற்போது திமுக கூட்டணியில் இணைந்து செயல்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வைகோவின் மகன் துரை வைகோ நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். இந்த சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட மதிமுக ‘காய்’ நகர்த்தி வருகிறது. ஆனால் இந்த முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் திமுகவில் கூடுதலாக இடம்பெற்று உள்ளதால் இரட்டை இலக்க தொகுதிகள் வழங்க இயலாது என திமுக தரப்பு சொல்லி வருகிறது. அப்படி இல்லாத பட்சத்தில் ராஜ்யசபா சீட் தர வேண்டும் என மதிமுக கேட்டு வருகிறது. இத்தகைய சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை திமுக தலைமையிடம் மதிமுக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதில், 16 தொகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதில் மதிமுக ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள சில தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் நோக்கில் சில குறிப்பிட்ட தொகுதிகளைப் பட்டியலில் இணைத்துள்ளதாககூறப்படுகிறது. அந்தவகையில், சிங்காநல்லூர் அல்லது பல்லடம் அல்லது கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் அந்த கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடலூர் அல்லது புவனகிரி இவற்றில் ஏதேனும் ஒரு தொகுதி கிடைக்கப்பெற்றால் மதிமுகவின் முக்கிய தலைவர் செந்தில் அதியமான் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும், மதுரை தெற்கு தொகுதியும் அப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. கடையநல்லூர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாளையங்கோட்டை தொகுதியை நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாமிற்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறை தொகுதிகளையும் உத்தேச பட்டியலில் கேட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சிவகாசி அல்லது விருதுநகர் தொகுதியை ரவிச்சந்திரனுக்கு பரிந்துரைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல, கடந்த முறை வெற்றி பெற்ற சாத்தூர் தொகுதியையும் கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோக, கோவில்பட்டி, மொடக்குறிச்சி மற்றும் தளி போன்ற தொகுதிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்டுகளை வழங்க இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான், தொகுதிகள் ஒதுக்கீடு இறுதி செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.