Rock Fort Times
Online News

விஸ்வரூபம் எடுக்கும் நில மோசடி வழக்கு – திருச்சியில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 500 கிலோ மெகா லாக்கர்! சிக்கப்போவது யார் யாரோ? ( வீடியோ இணைப்பு )

திருச்சி, அரியமங்கலத்தில் மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் நில மோசடி தொடர்பாக ஏழு மணி நேரம் சோதனைக்கு பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும், திறக்க மறுத்த லாக்கரையும் போலீசார் எடுத்து சென்றனர்.  திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து வருவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.   இதன் ஒரு பகுதியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், நில மோசடி தொடர்பாக  திருச்சி, அரியமங்கலம் பால்பண்ணை லட்சுமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் திருச்சி மாநகர போலீசார் சோதனை செய்ய வந்தனர். அப்போது வீட்டில் உள்ளவர்கள் போலீசாரை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை.  இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல், மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள் 12 மணி நேரம் காத்திருந்தும் பட்டேலின் வீடு திறக்கப்படாததால் அன்றும் காத்திருந்தனர்.  இந்நிலையில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பழனி தலைமையிலான போலீசார், நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர்.  அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது.

வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். நேற்று  மதியம் ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 7மணி நேரமாக நடைபெற்றது. மேலும் மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.  அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.  மேலும் வீட்டில் உள்ள லாக்கரை திறக்க போலீசார் வலியுறுத்தியபோது, வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் சாவி இல்லை எனக்கோரி திறக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை அங்கிருந்து தகர்த்து வெளியே எடுத்து வந்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அந்த லாக்கருக்கு சீல் வைக்கப்பட்டது.  தொடர்ந்து காவல் துறைக்கு சொந்தமான கிரேன் உதவியுடன் லாக்கரை எடுத்துச்சென்றனர். போலீசாரால் கைப்பற்றப்பட்ட லாக்கர் நீதிபதி முன்னிலையில் திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும் போலீசார் தெரிவித்தனர்.

திருச்சி வந்த தமிழக ஆளுநருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு..

1 of 881

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்