கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து:- கரூரைச் சேர்ந்த தொழிலதிபரின் இரண்டு குழந்தைகள், மாமனார் உட்பட 14 பேர் பலி!
மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று(29-04-2025) இரவு 8.15 மணயளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவரர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4 வது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர். இந்த தீயானது மளமளவென பரவத்தொடங்கியது. இதனால் ஓட்டலில் பலரும் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து ஓட்டலுக்குள் அதிகாரிகள் சென்றனர். அப்போது தீயில் கருகிய நிலையில் 14 பேரின் உடல்கள் கிடந்தன. உயிரிழந்த 14 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபு. தொழிலதிபரான இவர், வாசனை திரவியம் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் பிரபு மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் தியா(10), ரிதன்(3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள இந்த ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் ஆகிய மூவரும் உடல் கருகி பலியாகினர். இதனைப் பார்த்ததும் தாய்- தந்தை இருவரும் கதறி அழுதனர். தீ விபத்தில் இறந்து போன முத்துகிருஷ்ணன் மற்றும் குழந்தைகள் ஆகியோரது உடல்களை உப்பிடமங்கலத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.