அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மாணிக்கராஜவை அமமுகவில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மாணிக்கராஜா திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் அமமுகவின் குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ், மத்திய மாவட்டச் செயலாளர் டெல்லஸ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்
ராமச்சந்திர மூர்த்தி உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாணிக்கராஜா கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள்
என்று கூறினார்.

Comments are closed.