சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் வசித்து வந்தவர் நவீன் பஞ்சலால் (வயது37). சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் நிறுவனத்தில் வருடாந்திர வரவு, செலவு கணக்குகளை நவீன் பஞ்சலால் பால் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தார். இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ரூ.45 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பால் நிறுவனம் சார்பில் கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டிய ராஜனிடம் புகார் செய்தனர்.இதைத்தொடர்ந்து போலீசார் பால் நிறுவனத்தில் பணம் கையாடல் தொடர்பாக நவீன் பஞ்சலாலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதற்காக அவரை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது விசாரணைக்கு நாளை வருகிறேன் எனவும், பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றும் கூறி தொடர்பை துண்டித்து விட்டார். இந்தநிலையில் நேற்று( ஜூலை 9) நள்ளிரவு வீட்டில் உள்ள அறையில் நவீன் பஞ்சலால் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் பஞ்சலால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பால் நிறுவனத்தில் பணம் கையாடல் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதால் எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நவீன் பஞ்சலால் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பணம் கையாடலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.