திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு வின்சென்ட் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை போலீசார், ரேஷன் அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று திருவெறும்பூர், துவாக்குடி மற்றும் அரியமங்கலம், அம்மாக்குளம், வடக்கு உக்கடை, தெற்கு உக்கடை, பால்பண்ணை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரியமங்கலம் கல்லாங்குத்து தேவி மார்ட் காம்பவுண்ட் அருகே உள்ள காலி இடத்தின் ஓரமாக நம்பர் பிளேட் இல்லாத டூவிலரில் இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்தது ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது. மேலும், அந்த இடத்தின் அருகே அவர் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசியை கடத்திச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில், 26 மூட்டைகளில் சுமார் 1050 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது. அதன்பேரில் அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ,தெற்கு தாராநல்லூர் சூரன் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ( 35 ) என்பதும், அரியமங்கலம், காட்டூர், பாப்பா குறிச்சி, திருவெறும்பூர், துவாக்குடி பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காகவும், மாட்டு தீவனத்திற்காகவும் கடத்தி செல்ல மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரேஷன் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments are closed.