தமிழகத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த 4.5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4.5 சவரன் தங்க நகையையும் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் எக்ஸ் வலைதளத்தில், “நாடாளுமன்ற உறுப்பினரின் சங்கிலியைப் பறித்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு செயின் மீட்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
Comments are closed.