
மதுரை சித்திரை திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்காலமாக காட்சியளித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சர்க்கரை தீபம் ஏந்தி கோவிந்தா கோஷத்துடன் பக்கதர்கள் கள்ளழகரை வரவேற்றனர். வழக்கத்தைவிட அதிகமான உற்சாகத்துடன் சித்திரை திருவிழா களைகட்டியது.
முன்னதாக அழகர்மலை நூபுர கங்கை தீர்த்தம் மூலம் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவனி வந்தார். தண்ணீரை பீய்ச்சியடித்தும் கருப்பண் சாமி வேடமிட்டும் அழகரை பக்தர்கள் வரவேற்றனர். வைகையாற்றில் தாமரை மலர்களால் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகரை வரவேற்க வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரையில் வைகை ஆற்றில் காத்திருந்தார். தொடர்ந்து, அதிகாலை 5.50 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உற்சாக மிகுதியில் நடனமாடினர் . கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வுக்காக இரும்பு வேலி அமைத்து 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கள்ளழகர் வைகைஆற்றில் இறங்கியபோது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் ராமராயர் மண்டபத்தில் நடைபெற்றது .


Comments are closed, but trackbacks and pingbacks are open.