நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில், ‘தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு புதன்கிழமை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்குரைஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 27 காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று மதிமுகவின் வழக்கறிஞரின் மின் அஞ்சலுக்கு தேர்தல் ஆணையம் இன்று காலை பதிலளித்துள்ளது. இதன் காரணமாக மதிமுகவுக்கு சுயேச்சை சின்னம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.