Rock Fort Times
Online News

ரூ.2430 கோடி மோசடி செய்தவா்களை பிடிக்க எம்-லாட் ஒப்பந்தம்…!

தமிழக காவல்துறை அதிரடி...

சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து, சுமார் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்தது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 21 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வழக்கில் முக்கிய இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல்ராஜ் ஆகியோர் துபாயில் பதுங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஆருத்ரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் ஆர்.கே. சுரேஷும் துபாயில் பதுங்கி உள்ளதால் அவர்களைக் கைது செய்ய, இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஆருத்ரா இயக்குநர் ராஜசேகரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தியா, துபாய் நாட்டுடன் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளைக் கையகப்படுத்தி கொள்ளவும், வழக்கின் தகவல்களைச் சேகரிக்கவும் மற்றும் சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் போது, ​​அவரை முறையாக விசாரிக்கவும் எம்-லாட் எனும் இந்த பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை செய்து, ராஜசேகர் வசித்து வரும் இருப்பிடம், பயன்படுத்தி வரும் காரின் பதிவெண், முதலீடு செய்தற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, துபாய் நாட்டுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த மோசடி பணத்தை, இயக்குநர் ராஜசேகர் துபாயில் முதலீடு செய்திருப்பதாக கண்டுபிடித்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், இருநாட்டு பரஸ்பர ஒப்பந்தம் மூலம் சொத்துக்களை முடக்க முடியும் எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் துபாயில் சொந்தமாக ஒரு இடத்தை அசையா சொத்தாக வாங்குவதில் சட்ட சிக்கல் இருக்கும் நிலையில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கலாம் என்றும், தெரிவித்துள்ளனர்.

மேலும், துபாயில் சுமார் 300 கோடி ரூபாய் வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாட்டுடன் எம்-லாட் எனும் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்தி, ஆருத்ரா வழக்கு நடைபெறும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று அவற்றை இருநாட்டு அதிகாரிகள் மூலமாக துபாய் நாட்டின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து துபாயில் முதலீடு செய்யப்பட்டுள்ள மோசடி பணத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாது மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜசேகர் உள்ளிட்டவர்களை பிடிக்க, ஏற்கனவே இன்டர்போல் மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த பரஸ்பர ஒப்பந்தத்தின்படி ராஜசேகர் உள்ளிட்டவர்களை அந்நாட்டு காவல்துறை, தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்